ஐனாதிபதி வழங்கிய உறுதிமொழி எங்கே?: சோ.சுகிர்தன்

sugirthan_tellippalaiதமிழ் மக்களின் வீடுகளை இடித்து அழிக்க வேண்டாமென ஐனாதிபதி வழங்கிய உறுதிமொழி எங்கே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் வினவியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகிர்தனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இராணுவத்தினர் வலி.வடக்கின் கட்டுவன் மற்றும் குரும்பசிட்டிப் பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயமென்ற போர்வையில் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் மேற்படி பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை அவர்களுடைய கண்முன்னே இராணுவத்தினர் கடந்த ஒரு வாரகாலமாக இடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சம்பந்தனுக்கு தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து மேற்படி விடயம் தொடர்பாக சம்பந்தன் ஐனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் வீடுகளை இடித்தழிக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துமாறு ஐனாதிபதி தெரிவித்திருந்த பின்னரும் இராணுவத்தினர் வீடுகளை இடித்தழித்து வருகின்றனர்.

இதனை நிறுத்துமாறு தமக்கு எதுவித அறிவித்தல்களும் வரவில்லையென இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளதுடன் அவ்வாறான அறிவித்தல்கள் ஏதும் வந்தால் பார்ப்போமென்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் துடிக்கின்ற அரசிற்கு இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் பாதிப்புக்களையே ஏற்படுத்துவதாக அமையும்.

இத்தகைய பிரச்சனையில் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ நேரடியாகத் தலையிட்டு இதனை நிறுத்தி வைக்க வேண்டும். இதனையே இங்குள்ள மக்களும் எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts