இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்க்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை!

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

சென்னையில் அவரை கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர்.

இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சுதந்திரம் பெற்றது முதல் பல ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், இலங்கை அகதிகள் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நல்லுறவு இருந்து வருகிறது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ச்சிபூர்வமாக கருதி, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாம்களில் உள்ளோர் வலுக்கட்டாயமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய பின்னர், விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப்படுவர். அகதிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். அகதிகளை அரசு அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். விதிமுறையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அகதிகள் என்று காரணம் காட்டி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படுவது இல்லை என புழல் அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவிகள் ஜே. நிரோஜா, கமலாலோகி ஆகியோர் கூறினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது:-

பெற்றோருடன் 1990 ஆம் ஆண்டே தமிழகத்துக்கு புலம்பெயர்ந்துவிட்டோம். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறோம். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றதுடன் வளாகத் தேர்வில் பலமுறை தேர்வுசெய்யப்பட்டோம். ஆனால் சான்றிதழ் சரி பார்ப்பின்போது, இலங்கை அகதி என்ற ஒரே காரணத்துக்காக பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.

தமிழகத்திலேயே இருக்கவே விரும்புகிறோம். இங்குள்ள பிறப்பு, கல்விச் சான்றிதழ்கள் மூலம் இலங்கையில் வேலைவாய்ப்புகள் பெறுவது மிகவும் கடினம். எனவே, தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்றவகையில் விதிமுறைகளை தளர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Posts