இந்தியாவில் இலங்கைத் தமிழ் இளைஞர் பலி!- தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பொலிஸ் காவலில் இருந்த இலங்கை அகதி மோகன் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

mohan

தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை இயக்குனருக்கும், நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

பொலிஸ் காவலில் இருந்த மோகன், துன்புறுத்தல் காரணமாகவே, உயிரிழந்ததாக ஆணைய உறுப்பினரும் நீதிபதியுமான முருகேசன் கூறியுள்ளார்.

மேலும் சட்ட விதிகளை மீறி, மோகன் 3 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தாகவும், அவர் கூறியுள்ளார்.

தடுப்புக்காவல் மரணங்களை 24 மணி நேரத்திற்குள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கும் நிலையில் மோகனின் மரணம் குறித்து ஆணையத்திற்கு மாநில அரசு உரிய தகவல்களை அளிக்கவில்லை என்றும் நீதிபதி முருகேசன் கூறியுள்ளார்.

போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணைக்காக இலங்கை தமிழர் மோகன் கடந்த 2-ம் திகதியன்று பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணையின் போது, உடல்நலம் குன்றி நினைவிழந்த அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிசிக்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts