இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – ரஜினிகாந்த்

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அரசியல், சினிமா, தனி வாழ்க்கை, முக்கிய பிரச்சினைகள் குறித்து மனம் திறந்திருந்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. இலங்கை தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முதலில் இந்தியாவில் இருக்கக் கூடிய இலங்கை தமிழ் அகதிகளை, இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இதைச் செய்தே ஆக வேண்டும் எனவும் தமிழக அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாகச் சிறையில் வாழ்வது போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றிப் பேச இங்கு யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இந்தியா எப்போது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும் அது இலங்கையின் பிரச்சினைதானே என்று விட்டுவிடக் கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Posts