Ad Widget

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்!!

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக, இந்தியாவின் இரண்டு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு மற்றும் மனந்தவாடி துணை கலெக்டர்களினால், மனந்தவாடிக்கு அருகில் உள்ள கம்பமால கொலனிக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘குறித்த அகதிகள், அங்குள்ள தேயிலைத் தோட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 94 வீடுகளுக்கான கழிப்பறை வசதிகள் ஒழுங்காக இல்லை; அத்தியாவசியத் தேவைகளான நீர் மற்றும் மற்றைய தேவைகள் கூடப் போதுமானதாக இல்லை; அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் பலர் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சாதிச்சான்றிதழ்கள் (caste certificate) மற்றும் ரேஷன் அட்டைகள் (Ration cards) இன்மையால், குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் நலன்புரித்திட்ட நன்மைகளும் அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதில்லை’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களுக்கான சிகிச்சைகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் ஆனால், ஓய்வெடுக்க வேண்டிய அவர்கள் தோட்டத்தில் இன்னும் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாணவர்கள் அங்குள்ள ஆற்றைக் கடந்து கல்வி கற்கச் செல்ல வேண்டும் என்பதனால், பாடசாலைகளுக்குச் செல்வதுமில்லை. ஆற்றைக் கடந்து செல்வதற்கான பாலமோ வேறு எந்தவொரு ஏற்பாடோ அவர்களுக்கு செய்து கொடுக்கப்படவும் இல்லை என்றும் அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் வீடுகளுக்குத் தனித்தனி கழிப்பறைகளை அமைத்துக் கொடுப்பதற்கும் உப – கலெக்டர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts