இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதை எதிர்க்க வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இறக்குவானையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”வடக்கு கிழக்கிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், குறித்த மாகாணங்களுக்கு வெளியில் சென்று பணியாற்ற விரும்புவதில்லை.
அதன் காரணமாவே இந்தியாவிலிருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் வெளிப்பிரதேசங்களுக்கு செல்ல விரும்பாமை அவர்களுடைய சொந்த விருப்பம். யுத்த காலத்தில் அவர்கள் சேவை செய்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
ஆனால், தற்போது சொந்த பிரதேசத்தில் பணியாற்ற விரும்புகின்றனர். அதனையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்காகத்தான் நாம் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க தீர்மானித்தோம்.
அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து புரிதல் இன்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது. ஆசிரியர் தொழில் என்பதை விட அது ஒரு சேவை. அதனை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.
எனவே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டுவரத் தடை விதிக்க வேண்டாம். இவ்விடயம் தொடர்பான சரியான புரிதல் இல்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.