இந்தியாவின் 8 வாகனங்கள்: வடக்கு மாகாணசபையில் குழப்பம்

வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

north-provincial-vadakku-npc

ஆயினும், இந்த நடவடிக்கை மாகாணசபை உறுப்பினர்களிடையே குழப்ப நிலையை உருவாக்கும் என்றும், அவ்வாறு வழங்குவதாக இருந்தால் எல்லா உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வழங்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அதேநேரம், எட்டு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படுமானால், அவற்றை உறுப்பினர்கள் யாரும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி சபை உறுப்பினர்களுக்கு மொட்டைக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

வடமாகாணசபை உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்று, பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது, சபையின் 38 உறுப்பினர்களுக்கும் இந்தியா வரி விலக்களிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்து வழங்க முன்வந்திருந்ததாகவும், எனினும் இலங்கையின் நிதியமைச்சு அதற்கு ஒப்புதலளிக்க மறுத்துவிட்டது என்றும் மாகாணசபையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு வரி விலக்களிக்கப்பட்ட நிலையில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்கினால் நாட்டில் உள்ள ஏனைய எட்டு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அந்தச் சலுகையை வழங்க வேண்டியிருக்கும், எனவே அதனை செய்ய முடியாது என்று நிதியமைச்சு காரணம் கூறியிருந்ததாகவும், அதனையடுத்தே, எட்டு வாகனங்களை மட்டும் வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதுதொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இது குறித்து, பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வடமாகணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ‘8 வாகனங்களை – அதுவும் சமூகத்திற்கு கூடிய அளவில் சேவை செய்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என கூறினார்.

இப்படி 8 பேருக்கு மட்டும் வாகனங்களை வழங்குவது என்பது உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், எனவே வாகனங்கள் வழங்கினால் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் சிவஞானம் தெரிவித்தார்.

அமைச்சர்களுக்கும் அவைத் தலைவர் மற்றும் துணை அவைத்தலைவர் ஆகியோருக்கு அரசு வாகனங்களை வழங்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், இரண்டரை ஆண்டுகளின் பின்னர் வரிவிலக்களிக்கப்பட்ட வாகனங்களைப் பெறுகின்ற உரிமை, இந்திய வாகனங்களைப் பெற்றுக் கொண்டால், உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற பிரச்சினையும் இருக்கின்றது என குறிப்பிட்டார்.

Related Posts