டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இந்த ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது.
இந்த படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகை மெரில் ஸ்ட்ரீப், ஸ்லம் டாக் மில்லியனைர் பட நாயகி ப்ரிடா பிண்ட்டோ, நடிகரும் இயக்குனருமான அக்தர், ஐ.நா. மனித உரிமைகள் துறை முன்னாள் செயலாளரான வேலரி ஆமோஸ் உள்ளிட்டோர் முதல் திரையீட்டை பார்த்தனர்.
இந்த ஆவணப்படம் ஓடி முடிந்தவுடன் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று இயக்குனரும், தயாரிப்பாளருமான லெஸ்லி உட்வினை பாராட்டும் வகையில் தொடர்ந்து கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதற்கு நன்றி தெரிவித்து பேசிய உட்வின், ‘இந்திய அரசு இந்த படத்துக்கு தடை விதித்திருந்தாலும், முற்போக்கு எண்ணம் கொண்ட இந்திய மக்கள் இந்த கொடூர கற்பழிப்புக்கு எதிரான ஒரு மாற்றத்தை வலியுறுத்துவார்கள்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பின்னர், பலியான டெல்லி மாணவிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை மெரில் ஸ்ட்ரீப், ‘அந்த கற்பழிப்பு சம்பவத்துக்கு பிறகு பலியான மாணவியின் பெயர் என்ன? என்பது பல வாரங்களாக வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது. பின்னர், இந்தியாவின் மகள் என்ற பெயரால் அவர் அறியப்பட்டார். அவர் இந்தியாவின் மகள் மட்டுமல்ல; எங்கள் மகளும் கூட’ என்று குறிப்பிட்டார்.