கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார்.
இவரது கபட நாடகத்தை எவரும் நம்பமாட்டார்கள், இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
வல்வெட்டித்துறையில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
அண்மையில் நான் இந்தப் பிரதேசத்திற்கு வந்தபோது, டக்ளஸ் தேவானந்தா ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். இந்திய மீனவர்கள் மீது தனக்கு கரிசனை உள்ளது போல் காட்டிக் கொள்வதாக அந்தச் செயற்பாடு இருந்தது. இப்படிச் செய்தாலாவது தன்னைக் கொலைக் குற்றவாளி பட்டியலில் இருந்து விடுவித்து இந்தியா பொதுமன்னிப்பு வழங்கும் என்ற சுயலாப நோக்கம் அவரது செயற் பாட்டில் தெரிந்தது.
வல்வெட்டித்துறை வீரம் விளைந்த பூமி. இந்த வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது.
இறப்பு என்பது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் சம்பவம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரின் இறுதிச் சடங்கு இங்கே நடந்தபோது, அட்டூழிய காரர்கள் உடன் பிறப்புகளைக்கூடக் கலந்து கொள்ள விடவில்லை.
வீட்டுக்கு வீடு வாசல்களில் இராணுவத்தை நிறுத்தி மக்களை வெளியே வரவிடாமல் தடுத்தனர். இப்படி ஓர் அவலம் இந்த மண்ணில் நடந்துகொண்டிருக்க, இணக்க அரசியல் பேசும் டக்ளஸ் தேவானந்தா மனித நேயம் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது ஆளும் கூட்டணிக்குள் மூன்று பிரதான அணிகள் இருக்கின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.குழு,அங்கஜனின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மூன்றாவாதாக இராணுவத்தின் யாழ். கட்டளைத் தளபதி ஹத்துரு சிங்க அணி.
இந்த உள்வீட்டுக் கட்சிகளுக்குள் இப்போது குத்து வெட்டுகள் தாராளமாக இடம்பெறுகின்றன. ஆனால் டக்ளஸ் தேவானந்தா மட்டும் மிகவும் மெளனமாக இருக்கின்றார்.
இதற்கு காரணம் தன்னை விடயாரும் மிஞ்சிவிடக் கூடாது என்பதே என்றார் சரவணபவன்.