இந்தியாவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராம் நாத் கோவிந்த்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோவிந்த்திற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

‘உங்களது அறிவும் ஆட்சித் திறனும் சுபிட்சத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உயர்ந்த ஸ்தானத்தில் உங்களது பதவியானது உங்களது நாடு அதன் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்றும் ஜனாதிபதி அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் பலமான கூட்டுறவு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற தாம் விரும்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ராம் நாத் கோவிந்த்திற்கு ஜனாதிபதி ஏற்கனவே தனது டுவிட்டர் ஊடாக வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts