வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக, நான் தேர்வு செய்யப்பட்டதில், இந்தியாவின் பரிந்துரை ஏதும் இல்லை,” என, முன்னாள் நீதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளருமாகிய விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில், 25 ஆண்டுகளுக்கு பின், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால், இம்மாதத்தின் கடைசி வாரத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன், முதல்வர் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில், இந்தியாவின் தலையீடு உள்ளதாக, பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது குறித்து விக்னேஸ்வரன் கூறியதாவது
“தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில், இந்தியாவின் தலையீடு ஏதும் இல்லை. ஏனென்றால் இந்தியாவின் சார்பில் யாரும் என்னை சந்திக்கவில்லை.நானும், இந்திய அரசு அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. எனவே, பத்திரிகைகளில் வந்த செய்தி உண்மையல்ல.பலர் கேட்டுகொண்டதன் பேரில், நான் வேட்பாளராக தேர்தலில் நிற்க ஒப்புக்கொண்டேன். போலீஸ் என்பது மக்களை பாதுகாக்கக் கூடியது. இந்த விஷயத்தில், மாகாணத்துக்கு வெளியே உள்ளவர்கள் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.நான் மாகாண முதல்வராக தேர்வு செய்யப்பட்டால், ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படுவேன். சிங்களர்களுக்கு நான் எதிரானவன் அல்ல. ஏனென்றால், என் குழந்தைகள், சிங்களர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்”.இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.