இந்தியாவின் பயிற்சியாளராக கும்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே நியமிக்கப்பட்டுள்ளார்.

anil-kumble

நீண்ட காலம் காலியாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் இருந்து 21 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கமிட்டி இந்திய முன்னாள் வீரர்கள் கும்பிளே, ரவிசாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டூவர்ட் லா உள்பட குறிப்பிட்ட 10 பேரிடம் மட்டும் சுமார் 10 மணி நேரம்நேர்காணல் நடத்தினர். ஒவ்வொருவரும் தங்களது பயிற்சி அணுகுமுறை, அணியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.

இதன் பின்னர் கிரிக்கெட் கமிட்டி ஆலோசனை நடத்தி, பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்து, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தது.

புதிய பயிற்சியாளர் யார் என்பது இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தின் போது அறிவிக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நேற்றே கிரிக்கெட் வாரிய கலந்தாய்வு கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில்கும்பிளே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த தகவலை நிருபர்களின் மத்தியில் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாகூர் மேலும் கூறுகையில், ‘பயிற்சியாளர் தேர்வு முறை அனைத்தும் முறைப்படி வெளிப்படையாக நடந்தது. பல்வேறு தரப்பு ஆலோசனைக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்பிளேவை நியமிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். அவர் ஓராண்டுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார். எங்களை பொறுத்தவரை பயிற்சியாளர் இந்தியர் அல்லது வெளிநாட்டவர் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது கிடையாது. பயிற்சியாளர் பதவிக்கு யார் சிறந்தவர் என்பது தான் முக்கியம். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தவர்களின் சேவையை நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தியரை மட்டுமே பயிற்சியாளராக நியமிப்பது என்ற வரையறை எதுவும் இல்லை. இந்திய கிரிக்கெட் அணிக்கு எது நல்லதோ அதனை செய்ய விரும்புகிறோம். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மற்ற உதவியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்’ என்றார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 45 வயதான கும்பிளே இந்திய அணிக்காக 132 டெஸ்ட், 271 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் (619) வீழ்த்திய இந்தியர் என்ற சிறப்புக்குரியவர். பாகிஸ்தானுக்கு எதிராக 1999–ம் ஆண்டு நடந்த டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மாயாஜால சுழல் சூறாவளி. இந்திய அணிக்காக 14 டெஸ்டுக்கு கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் விளையாடி இருந்தாலும் பயிற்சியாளர் பதவியில் பெரிய அளவில் அவருக்கு அனுபவம் கிடையாது. என்றாலும் அவரது அணுகுமுறைகள் கிரிக்கெட் வாரியத்தை வெகுவாக கவர்ந்து விட்டது.

2000–ம் ஆண்டு கபில்தேவ் விலகிய பிறகு முழு நேர பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் கும்பிளே தான். கும்பிளே நிருபர்களிடம் கூறுகையில், ‘வேறு பணியுடன் மீண்டும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் அறைக்கு திரும்புவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆலோசனை கமிட்டிக்கு நன்றி. இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைவதற்கு இதுவே சரியான நேரம் என்று கருதினேன். எனது முடிவுக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருக்கிறார்கள்.

எந்த வகையான சவாலுக்கும் நான் எப்போதும் தயாராக இருப்பது உண்டு. பயிற்சியாளர் என்பவர் பின்னால் இருப்பவர் தான். கிரிக்கெட்டில் வீரர்கள் தான் எப்போதும் முதன்மையானவர்கள். இந்த பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன்.’ என்றார்.

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 4 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் இருந்து கும்பிளேவின் ‘இரண்டாவது இன்னிங்ஸ்’ தொடங்கும்.

Related Posts