இந்தியாவின் துவிச்சக்கரவண்டி வழங்கும் செயற்திட்டம் நிறைவு

p2532இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் செயற்திட்டம் கடந்த திங்கட்கிழமையுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை இந்திய அரசாங்கம் வழங்கும் என்று கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் 67 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்திற்கு மட்டுமே இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 2500துவிச்சக்கர வண்டிகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2500 துவிச்சக்கர வண்டிகளும் மன்னார் மாவட்டத்திற்கு 1750 துவிச்சக்கர வண்டிகளும் வவுனியா மாவட்டத்திற்கு 1750 துவிச்சக்கர வண்டிகளும் யாழ்.மாவட்டத்திற்கு 1500 துவிச்சக்கரவண்டிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்த துவிச்சக்கர வண்டிகளை முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இந்திய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஸ்மாசுராஜ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண ஆளுனர் சந்திரசிறி, இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் வழங்கி வைத்தனர்.

துவிச்சக்கர வண்டி விநியோகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் பெரும் பங்காற்றியுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts