57 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், இந்தியாவை சேர்ந்த இருவர் இசையுலகின் கவுரவம் மிக்க இவ்விருதினை பெற்றனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரையுலகம் மற்றும் பாப் இசை உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
இவ்விருதுக்கான இறுதிப்பட்டியலில் பலர் போட்டியிட்டனர். எனினும், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சாம் ஸ்மித் ஒருசேர நான்கு கிராமி விருதுகளை தட்டிச்சென்றார். கடந்த ஆண்டின் சிறந்த பாடல், கடந்த ஆண்டில் சாதனை படைத்த மெகா ஹிட் பாடல், சிறந்த அறிமுக பாடகர், சிறந்த பாப் பாடல் ஆல்பம் ஆகிய இந்த நான்கு விருதுகளை நான் பெறுவதற்கு மூலக்காரணமாக இருந்த எனது முன்னாள் காதலிக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்மித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஸ்மித்(22) அவரது ‘இன் த லோன்லி ஹவர்’ என்ற தனது ஆல்பத்திற்காக சிறந்த புதுமுகம் மற்றும் சிறந்த பாப் வோகல் ஆல்பத்திற்கான விருதை பெற்றார். இந்த ஆண்டின் சிறந்த ஆல்பத்திற்கான விருதினை தனது மார்னிங் பேஸ் மூலம் பெக்(44) பெற்றார்.
இதே மேடையில், நவீன காலத்தின் சிறந்த ஆல்பம் என்ற விருதுக்கான தொகுதியின் கீழ் ‘விண்ட்ஸ் ஆப் ஸம்ஸாரா’ என்ற ஆல்பத்தினை தயாரித்து வெளியிட்ட பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ் (33) என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
33 வயதாகும் ரிக்கி கேஜ் இசை மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் யாரிடமும் முறையாக கற்றறியாமலே இசையில் தேர்ச்சி பெற்று, பிரபல கன்னட படங்களுக்கு பின்னணி இசை அமைத்து தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பெண் கல்விக்காக பாகிஸ்தான் தலிபான்களை எதிர்த்து போராடியதால் மரணத்தின் விளிம்பு வரை சென்று மறுபிறவி எடுத்த மலாலா யூசுப்சாய் தனது வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களை விளக்கும் ஆவணப்படத்திற்கு இசை அமைத்த, சமூக ஆர்வலர் நீலா வாஸ்வானி என்ற இந்தியரும் சிறந்த குழந்தைகள் ஆல்பத்துக்கான தொகுதியின்கீழ் சிறப்புக்குரிய இவ்வாண்டின் கிராமி விருதினை வென்றுள்ளார்.