இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: விரைவில் மீட்க மத்திய அரசு தீவிரம்

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் வைத்துள்ள இடம் தெரிந்து விட்டது.

Irac

அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈராக்கில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு, அங்குள்ள சன்னி முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து, அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந¢த 8 நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் நாட்டின் வடக்கு பகுதியில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி விட்ட தீவிரவாதிகள், தலைநகர் பாக்தாத்தை நெருங்கியுள்ளனர். அவர்கள் முன்னேறுவதை தடுக்க வான்வெளி தாக்குதல் நடத்தும்படி அமெரிக்காவை ஈராக் அரசு கேட்டு கொண்டுள்ளது.

இதையடுத்து, ஈராக்குக்கு மீண்டும் படைகளை அனுப்புவது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது, தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்பி வைத்துள்ள அமெரிக்கா, பாக்தாத்தில் உள்ள தனது தூதரகத்தின் பாதுகாப்புக்காக பெரிய படையையும் அனுப்பியுள்ளது. உள்நாட்டு போர் தீவிரமாகி வருவதால், ஈராக்கில் தங்கியுள்ள பல்வேறு நாட்டு மக்கள் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். ஈராக் மக்களும் சண்டை நடக்காத பகுதிகளுக்கு பாதுகாப்புக்காக வெளியேறி வருகின்றனர். இங்கு வசிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களும் பரிதவித்து வருகின்றனர்.

மோசூல் நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் 40 இந்தியர்கள் நேற்று முன்தினம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்கள் பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தங்களிடம் பிடிபடுபவர்களை தீவிரவாதிகள் காட்டுமிராண்டித் தனமாக சுட்டு கொன்று வருகின்றனர். இதனால், கடத்தப்பட்ட இந்தியர்களின் கதியை நினைத்து அவர்களின் உறவினர்களும், மத்திய அரசும் கவலை அடைந்துள்ளன. அவர்களை மீட்க பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடத்தப்பட்ட தங்களுடைய உறவினர்களை மீட்டுத் தரும்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயிலில் குடும்பத்தினர் புகைப்படங்களுடன் நேற்று குவிந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட இந்தியர்களை தீவிரவாதிகள் மறைத்து வைத்துள்ள இடம் தெரிந்து விட்டதாக ஈராக் அரசிடம் இருந்து இந்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் டெல்லியில் நேற்று தெரிவித்தார்.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநிலத்தில் சோகம் நிலவுகிறது. அவர் களை மீட்பது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச் சர் சுஷ்மா சுவராஜை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேற்று டெல்லி சென்று சந்தித்து பேசினார். கடத்தப்பட்டவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பாதலிடம் சுஷ்மா உறுதி அளித்துள்ளார். இந்தியர்களை கடத்தியுள்ள தீவிரவாதிகள், அவர்களை விடுவிப்பது தொடர்பாக இதுவரை எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. அதனால், அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது.

Related Posts