இத்தாலி அருகே அகதிகள் சென்ற 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக வெளியான தகவலில்,1 வயது குழந்தையின் உடல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது.
சிரியா, ஈராக், ஏமன், துருக்கி, லிபியா, சூடான், எரித்ரியா உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் இடைத்தரகர்கள் மூலம் பாதுகாப்பற்ற படகுகளில் கடல் பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் மட்டும் இதுபோல் அகதிகள் சென்ற 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கின. இதில் 700-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கார்லோட்டா சமி தெரிவித்தார். இந்த படகுகளில் பயணம் செய்த 600-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக கடந்த வியாழக்கிழமை, லிபியாவில் இருந்து 2 மீன்பிடி படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எரித்ரியா, லிபியா நாடுகளின் அகதிகளை இத்தாலிக்கு ஏற்றிச் சென்றபோது நடந்த படகு விபத்துதான் அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
இதில் உயிர் தப்பிய 2 பேர் இத்தாலிய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர். நடுக்கடலில் தத்தளித்த 75 அகதிகளை அவர்கள் உயிருடன் மீட்டனர். இது தவிர, 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த படகில் பயணம் செய்த 550 அகதிகளின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய அந்த இருவரும் கூறிய தகவல்கள் உருக்கமாக இருந்தது. இந்நிலையில் மனிதாபிமான அமைப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மூழ்கி பலியான 1 வயது குழந்தையை பிணமாக மீட்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
கடலில் மிதந்த அந்த குழந்தையை ஜெர்மனியை சேர்ந்த மீட்புக் குழு அதிகாரி தனது கைகளால் அரவணைத்தப்படி இருக்கும் அந்த புகைப்படம் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கும் விதமாக உள்ளது.
இந்த புகைப்படம் அகதிகளின் ஒட்டுமொத்த துயரத்தையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது.
அந்த குழந்தையின் உடலை மீட்ட மீட்பு அதிகாரி மார்ட்டின் கூறுகையில், கடலில் மிதந்த அந்த குழந்தையின் பிஞ்சுக் கைகளை பிடித்து அந்த உடலை தூக்கி நான் அரவணைத்துக் கொண்டேன். அதன் கண்களில் எந்த வித அசைவும் இல்லாமல் இருந்தது.
6 மணி நேரத்திற்கு முன்பு இந்த குழந்தை கண்டிப்பாக உயிருடன் தான் இருந்திருக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
அந்த குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை அவர் குறிப்பிடவில்லை.
மனிதாபிமான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற புகைப்படங்களை நாம் மீண்டும் பார்க்காமல் இருக்க அகதிகள் உருவாவதை தடுக்க வேண்டும். அதேபோல் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.