ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று ராஜபக்சேவின் மகன் யோசித ராஜபக்சேவைக் கைது செய்ததை விமர்சித்துள்ளார் கோத்தபயா ராஜபக்சே.
ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்தபயாவை கலங்கடித்து வருகின்றனர்.
தமிழர்களும், சிங்களர்களும் பாரபட்சமே இல்லாமல் கோத்தபயாவை அவரது டிவிட்டுக்குப் பதிலடி கொடுத்தும், சமூக வலைதளத்தின் பிற பக்கங்களிலும் சரமாரியாக கமெண்ட் போட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராஜபக்சேவின் மகனான யோசித ராஜபக்சே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ஆவார். சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
ராஜபக்சேவின் 2வது மகன்தான் இந்த யோசித ராஜபக்சே. ராஜபக்சேவின் மற்ற இரு மகன்களைப் போலவே இவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.
ராஜபக்சே அதிபராக இருந்த சமயத்தில் இந்த மூன்று மகன்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் நிதி முறைகேடு புகாரில் யோசித கைது செய்யப்பட்டுள்ளார்.
யோசித முன்பு கடற்படையில் இருந்தவர் ஆவார். அதுதவிர சிஎஸ்என் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர் செய்யாத அட்டகாசம் இல்லை என்கிறார்கள்.
இவரை பல பெண்களுடன் இணைத்தும் சர்ச்சைகள் வெடித்தன. இவரது முன்னாள் காதலி யசரா அபநாயகே. இவரும், யோசிதவும் அப்படி நெருக்கமாக பழகி வந்தனர்.
இப்போது இந்த இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களைப் போட்டுத்தான் டிவிட்டரில் பலரும் கோத்தபயாவைக் கேள்வி கேட்டு வருகின்றனர்.
யசராவின் கையில் யோசித கடிப்பது போல இருக்கும் படத்தைப் போட்டு இவரா குழந்தை என்றும் பலர் கிண்டலடித்துள்ளனர்.
விதுரா என்பவர் கோத்தபயாவின் டிவிட்டுக்கு, அப்படியானால் 12 வயது பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டது என்ன செயல் என்று கேட்டுள்ளார்.
இதேபோல இலங்கையில் நடந்த பல்வேறு படுகொலைகளைக் குறிப்பிட்டு இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் கோத்தபயா என்றும் பலர் கேட்டுள்ளனர். இவை எதற்குமே கோத்தபயா பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.