இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்னும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை விடுவிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ள பொதுமக்களின் 615 ஏக்கர் காணிகளை மீண்டும் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேலும் விடுவிக்கப்பட வேண்டிய பொதுமக்களது காணிகளையும், கட்டிடங்களையும், கடற்தொழில்சார் துறைமுகங்களையும் படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, வலிகாமம் வடக்கு உட்பட வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள், கட்டிடங்கள், கடற்தொழில்சார் துறைமுகங்கள் என்பன மேலும் விடுவிக்கப்படாதிருக்கும் நிலையில், அம்மக்கள் தொடர்ந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

அத்துடன், ஏற்கனவே மீளக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு போதிய அடிப்படை மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் அரசு அவதானங்களைச் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts