ஹப்புத்தளை – ஹல்துமுல்ல – மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார்.
ஒட்டுமொத்த அரச அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
இதேவேளை மீறியபெந்த தோட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய எம்.மகேந்திரன் மற்றும் ராதா ஆகியோர் சம்பவம் தொடர்பில் விவரித்துள்ளனர்.
மகேந்திரன் கூறுகையில்,
காலை 7 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டதாகவும் அதில் 500ற்கும் மேற்பட்டோர் சிக்கியதாகவும் தனது குடும்பத்தில் 9 பேர் சிக்கியதாகவும் தெரிவித்தார்.
தானும் மண்ணுக்குள் புதைந்து பின்னர் ஒருவாறு ஓடித் தப்பியதாக அவர் கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட ராதா என்ற பெண் கூறுகையில், திடீரென மண்சரிவு வந்ததாகவும் தான் மண்ணுக்குள் புதையுண்ட போது ஆண்கள் மண்ணை அகற்றி தன்னை மீட்டதாகவும் குறிப்பிட்டார்.