இதுபோன்ற சவால்களை நாங்கள் சந்தித்ததே இல்லை – அம்லா

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரில் மூன்று ஆடுகளமும் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்க சாதகமாக இருந்தது. தென்ஆப்பிரிக்காவின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமாக இருந்தது.

இந்த தொடரை இழந்தது குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் அம்லா கூறுகையில்

‘‘இந்த சூழ்நிலையில் நாங்கள் விளையாடியதற்காக நாங்கள் கொஞ்சம் நிம்மதி அடையலாம். இதுபோன்ற ஆடுகளத்தில் நாங்கள் இதற்கு முன் விளையாடிய அனுபவம் எங்களுக்கு இல்லை.

என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற ஆடுகளத்தில் வெளிநாட்டு மண்ணில் விளையாடியதில்லை. இதனால் கொஞ்சம் நிம்மதி. ஏனென்றால் இது மிகவும் சவாலான போட்டி. நாங்கள் இதற்கு முன் இதுபோன்ற சவாலை சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது’’ என்றார்.

இந்த தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘அஸ்வின் உலகளவில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர். இலங்கையில் தொடரை வெல்ல அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடரை வெல்ல அஸ்வின்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

இது டெஸ்ட் கிரிக்கெட், நமக்கு பொறுமை தேவை. நமக்கான வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்த வகையில் மிஸ்ரா சிறப்பாக செயல்பட்டார். இந்த தொடரில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள் என்றும் கோலி கூறினார்.

இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் 29 வயதான அஸ்வின், இந்த டெஸ்டில் மொத்தம் 12 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். டெஸ்டில் அவர் 10-க்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 4-வது முறையாகும்.

இந்த ஆண்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 2015-ம் ஆண்டில் இதுவரை 8 டெஸ்டில் விளையாடி 55 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 2-வது இடத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (51 விக்கெட், 13 டெஸ்ட்) உள்ளார்.

* அஸ்வின் தனது 31-வது டெஸ்டுக்குள் 15-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முதல் 31 டெஸ்டுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை சாய்த்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Related Posts