”இணையத் தமிழுக்கு முன்னோடி” ஸ்ரீநிவாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு – மனைவியும் மரணம்!

சென்னையில் கொட்டித் தீர்த்த பெரு மழையால் சில சிறப்பான மனிதர்களின் மரணச் செய்திகளும் கூட மழையோடு மழையாக அடங்கிப் போனது பெரும் சோகம்தான்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளிவர முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீநிவாஸ். தமிழில் பல்வேறு மென்பொருட்களை அறிமுகம் செய்தவர்.

srinivas-wife-1

ஆன்மிக இதழாக வெளிவந்த “தெய்வ முரசு” மாத இதழின் பதிப்பாளராக இருந்த ஸ்ரீநிவாஸ் தமிழ் மொழிக்காக உழைத்தவர். சைவம் நெறிமுறைகள் குறித்த தமிழ் பட்டயப் படிப்பிற்கு முன்னோடியாக இருந்தவர்.

ஆனால், இன்று அவர் உயிருடன் இல்லை என்ற செய்தியே அவரைச் சார்ந்தவர்களுக்கு கூட தெரியவராமல் வெள்ளத்திலேயே கரைந்து போய்விட்டது. அடையாறில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் அவரை மட்டுமல்லாமல், அவரது மனைவியான சங்கராந்தியையும் இழுத்து சென்றுவிட்டது.

இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள வீட்டிலிருந்து தனது தம்பி நலமாக இருக்கின்றாரா எனக் காண வெளியே வந்த ஸ்ரீநிவாஸ் வெள்ளத்தின் வேகம் தாங்காமல் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். கணவரின் நிலையைக் கண்டு துடிதுடித்து தண்ணீரில் இறங்கிய சங்கராந்தியையும் விட்டு வைக்காமல் இழுத்துச் சென்றது வெள்ளம்.

இயக்குனர் தங்கர் பச்சானின் நண்பரான ஸ்ரீநிவாஸ், கிட்டதட்ட 16 இடங்களில் கோயில்களைக் கட்டி, தமிழில் குடமுழுக்கும், தமிழ் வழிபாட்டு முறையும் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி, தமிழ் கடிகாரத் துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக் கிய ஸ்ரீநிவாஸ், பன்னிரு திருமுறை களையும் மொபைலில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது” என்று குமுறியுள்ளார் அவரது தம்பி. சில நேரங்களில் பெரு வெள்ளம் சில பொக்கிஷ மனிதர்களையும் இழுத்துச் சென்றுவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமே!

Related Posts