இணையத்தள நிலையங்களும் செல்லும் சிறுவா்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவும்!

கிளிநொச்சி நகரத்தில் இயங்குகின்ற இணையத் தள நிலையங்களை நாடுகின்ற சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளினால் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

2010ம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி நகரத்திலே பல இணையத் தள நிலையங்கள் இயங்குகின்றன. இவ் இணையத் தள நிலையங்களை நோக்கி சிறுவர்கள் கூடுதலாக செல்வதாகவும் இதன் காரணமாக பெற்றோர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலே நாள்தோறும் பெற்றோர்களினால் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்படுகின்றன.

தங்களுடைய பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டாது பாடசாலை தவிர்ந்த நேரங்களில் இணையத் தள நிலையங்களை நாடிச் செல்வதாகவும் இது எதிர்காலத்தில் தமது பிள்ளைகளுக்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தி விடும் எனவும் இது தொடர்பாக இணையத் தள நிலையங்கள் தொடர்பான ஒரு கண்காணிப்பினை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் வேண்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களில் இணையத் தள நிலையங்களில் கணிணிகளுக்கிடையே உருவாக்கப்பட்டுள்ள திரைமறைவுகள் அகற்றப்பட வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்காணிப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இணையத் தள நிலையங்களில் காணப்படவில்லை.

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் காட்டுகின்ற விழிப்புணர்வே முக்கியமானதாகும். இன்றைய நவீன சூழலில் சிறுவர்களுக்கு கணிணி அறிவு அவசியமானது. அவையே பிழையான வழிகளை சிறுவர்களுக்குக் காட்டிவிடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

Related Posts