இணையத்தளங்களுக்கு சட்டம் வேண்டும்: வடமாகாண சபையில் பிரேரணை

அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் இலங்கையில் அமுலில் இருப்பது போன்று, இணையத்தளங்களையும் ஒழுங்குபடுத்த சட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சைக் கோருவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

CVK-Sivaganam

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில்,

‘இலங்கையில் அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டவிதிகள் அமுலில் இருக்கின்றன. ஆனால் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் அமுலில் இல்லை. சில இணையத்தளங்கள் நாட்டுக்கு வெளியே இயக்கப்படுகின்றன. அவ்வாறான இணையத்தளங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றன. கலாசாரத்தை கொச்சைப்படுத்தி வெளியிடுகின்றன. இளம் சந்ததியினரைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிடுகின்றன.

இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் ஆபாச படங்கள், காணொளிகளை வெளியிடுகின்றன. கட்டுப்பாடுகள் இல்லாமையால் சுதந்திரமாக அவற்றை வெளியிடுகின்றனர். இது சமூக அச்சுறுத்தலாகவுள்ளது. இணையத்தளங்களை பதிவு செய்வதற்கு சட்டப்படி ஏற்பாடுகளை செய்யுமாறு, வெகுஜன ஊடக அமைச்சை கோரவுள்ளோம். பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை தொழில்நுட்ப ரீதியில் தடை செய்வதற்கும் கோரவுள்ளோம்’ என்றார்.

இந்தப் பிரேரணை ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்படவில்லை. புங்குடுதீவு மாணவி கொலையின் பின்னர் அந்த மாணவியை ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் பொறுப்புக்கூறாத இணையத்தளங்களில் வெளிவந்தன. இதனையடுத்தே இந்தப் பிரேரணையை கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நேற்று நிறைவேற்றப்பட்ட மேலும் சில பிரேரணைகள்

போதைப்பொருளை தடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவு

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கு போதைப்பொருள் தடுப்பு விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோருகின்ற பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையை உறுப்பினர் ச.சுகிர்தன் முன்வைத்தார். சபைக்கு பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இராணுவம், பொலிஸார் வெளியேற வேண்டுமென பிரேரணை நிறைவேற்றம்

வவுனியாவில் தனியார் காணிகளில் தங்கியுள்ள இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் அந்தக் காணிகளிலிருந்து வெளியேறவேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இந்தப் பிரேரணையை முன்வைத்தார்.

அவர் உரையாற்றுகையில்.

‘செட்டிக்குளம் விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு அருகில் வேப்பம் இலை பிடுங்கச் சென்ற கந்தசாமி இராஜேஸ்வரி என்ற பெண், முகாமின் வேலியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் ஆகியும் வேலியில் ஏன் மின்சாரம் பாய்ச்சி வருகின்றார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் முகாம் அமைந்துள்ளது தனியார் காணியில் ஆகும். தபாலகம், நெற்சந்தை, கலாச்சார மண்டபங்கள், தனியார் காணிகள் என்பவற்றில் இருக்கும் இவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும்’ என்றார்.

இந்தப் பிரேரணை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.

Related Posts