இணையத்தளங்களில் அவதூறு செய்திகளை வெளியிட்டவர் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரை ,இணைய குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலம் அவதூறுக்கு உள்ளானவர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
குறிப்பிட்ட இணையத்தளங்கள் சில தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை பாலியல் குற்றம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அவை தொடர்பில் யாழில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் திங்கட்கிழமை(20) குறித்த இணையத்தளங்களை யாழில் இருந்து இயக்குவதற்கு துணைபோனவர் எனும் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த நபருடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இணையத்தளங்களால் அவதூறுக்கு உள்ளானவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு யாழ்.பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த இணையத்தளங்கள் அண்மையில் சுன்னாக பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு இருந்தன.
அது குறித்த அவதூறுக்கு உள்ளான யுவதி தனது வீடியோ வாக்கு மூலம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.அதில் தான் வேலை செய்த கலாசாரம் பேணும் அமைப்பின் தலைவரே குறித்த 3 இணையத்தளங்களினை இயக்குவதற்கு யாழில் இருந்து துணைபுரிவதாக குற்றஞ்சாட்டியிருந்தார் குறித்த அமைப்பைச்சேர்ந்த இளைஞரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.