இணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது!!

இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மடிக்கணனி, கைத்தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டு உரிமையாளரின் மனைவி, படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையிலும், தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலும் இராணுவத்தில் பணியாற்றுபவரை, அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்ததுடன் இணுவில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மடிக்கணனியையும் அங்கிருந்து மீட்டுள்ளனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சுன்னாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

இதன்போது, அவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆனாலும் அவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

அதேவேளை அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட பொலிஸ் சோதனைகளின் போது, ஒருவரின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு தொகை மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகவுள்ள கொள்ளையர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts