நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தனர்.
குறித்த சந்திப்பை தொடர்ந்து குறித்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேலினால் கையளிக்கப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம்.
யுத்தம் நிறைவடைந்த குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 12 ஆயிரம் போராளிகளை விடுவித்திருந்தார்.
ஆனால், சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொலை செய்ய முயற்சித்தவரை தவிர வேறு எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்க அரசியலில் ஈடுபட்டுவரும் கூட்டமைப்பு, பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை வெகுவிரைவில் விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், அதனை குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும்” என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.