நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் மேல், சப்ரகமுவ தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்தார்.
இடியுடன்கூடிய மழை பெய்யும்போது வெட்டவெளியிலோ மரங்களுக்கு கீழோ இருக்காமல் பாதுகாப்பான கட்டிடங்களிலோ அடைக்கப்பட்ட வாகனங்களிலோ தங்கி இருக்குமாறு வளிமண்டல வியல் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது. மேலும் வயல் வெளி,தேயிலை தோட்டம், மைதானம் மற்றும் நீர் நிலைகள்போன்ற வெளிப்பிரதேசங்களில் தங்கி இருக்கவேண்டாம் என்றும் அதேபோன்று வயறுடனான தொலைபேசி மற்றும் மின்சாரத்துடன் தொடர்புடைய உபகரணங்களை பாவனை செய்வதையும் துவிச்சக்கர வண்டி உழவு இயந்திரம் படகு போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது.
அத்துடன் கடந்த சில தினங்களாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இடம்பெற்று வரும் சீரற்ற கால நிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அந்த மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்து அமுலில் இருக்கும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த , எஹெலியகொட, கிரியெல்ல,அயகம, இரத்தினபுரி, கொலொன்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் கோலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.