இடி அமீனைப் போல் ஆட்சி நடத்துகின்றார் மஹிந்த! – மைத்திரி

இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மஹிந்தவின் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், அதற்கான சிறந்த சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

mythiri

ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-

மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டியுள்ளனர். மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டை சகட்டுமேனிக்கு அழித்தொழித்தவர்.

அதுமட்டுமல்ல, நீதித்துறை, நிர்வாகத்துறை, பொலிஸ்துறை என்று எல்லாவற்றையுமே அழித்து துவம்சம் செய்துள்ளார்.

அத்துடன், நாட்டின் நாடாளுமன்ற ஆட்சியை தலைகீழாக மாற்றினார். எனவே, மலரவுள்ள எமது அரசில் நீதித்துறையை வலுப்படுத்தி சிறந்ததொரு அரச கட்டமைப்பை உருவாக்குவோம்.

விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். தொழிலில்லாத பத்து லட்சம் பேருக்குத் தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவோம்.

நான் ஒரு விவசாயப் பின்னணியைக் கொண்டவன் என்கின்ற அடிப்படையிலே எனது அரசு விவசாயிகளின் அரசாக இருக்கும்.

மீனவர்களின் நலன்களும் பேணப்படும். இது பொதுமக்களின் அரசு. எனது அரசு தனிக் குடும்ப அரசாக இருக்காது. நான் மஹிந்த ராஜபக்‌ஷ போன்று மன்னராட்சி செலுத்த மாட்டேன். அவர் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களைக் கொண்டு மாடமாளிகைகளைக் கட்டியிருக்கின்றார்.

ராஜபக்‌ஷவின் குடும்பம் மன்னர்களின் குடும்பங்களைப் போன்று உல்லாசமாக வாழ்கிறது. இது சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் நாடு. இன, மத, மொழி வேறுபாடுகளின்றி இந்த நாட்டை ஆள்வோம். ஆகையினால் எல்லோரும் சகவாழ்வுடனும் இன செளஜயன்யத்துடனும் வாழலாம்.

எல்லோரும் தாம் விரும்பும் மதத்தை அனுசரித்துக் கொண்டு ஐக்கியமாக வாழ முடியும். துஷ்பிரயோகம் செய்கின்ற மஹிந்தவுக்கு வாக்களிக்காமல் சிறந்த முறையில் மக்களாட்சியை கொண்டுவரப்போகும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களியுங்கள் – என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளர் ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts