திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி டயஸ் உள்ளிட்ட அதிதிகள் வங்கிக்கட்டத்தினை உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் வங்கி நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர்.
இந்த திறப்பு விழா நிகழ்விற்கு வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி, வங்கியின் பணிப்பாளர் சபையின் பிரதிநிதிகள், ஏனைய வங்கிகளின் முகாமையாளர்கள் , மத்திய வங்கி முகாமையாளர், வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் வங்கி ஊழியர்கள் ,வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கிளை முகாமையாளர் உரையாற்றுகையில்,
2010ஆம் ஆண்டு திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட எமது வங்கிக் கிளையானது கடந்த நான்கு வருட காலத்தில் சிறந்த வளர்ச்சியினை பெற்றுள்ளது.
அத்துடன் சிறந்த வாடிக்கையாளர்களையும் கண்டுள்ளோம். எனினும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டு வாகன வசதியுடன் கூடிய விசாலமான இடத்தில் வங்கியினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வந்தோம்.
அதன்பயனாகவே திருநெல்வேலி சந்திக்கு அருகில் இயங்கிவந்த எமது வங்கியானது இன்று முதல்( நேற்று) தபால்பெட்டி சந்திக்கு அருகில் முழுமையான சேவையினை வழங்கவுள்ளது.
அத்துடன் வாடிக்கையாளர்களின் உடனடிப்பணத் தேவையினை நிறைவேற்றிக் கொள்ள 24 மணிநேரமும் 2 தன்னியக்க பணமாற்று இயந்திரம் (ஏ.ரி.எம்) செயற்படவுள்ளது.
எனவே எமது கிளையின் மூலம் வாடிக்கையாளர்களின் சகல தேவைகளும் துரித கதியில் நிறைவேற்றப்படும் என நம்புகின்றேன் என்றார்.