இடம்பெயர் மக்களை வாக்காளர்களாக பதிவுசெய்ய நடவடிக்கை

இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்யும் விசேட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யுத்தம், இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுள் சிலர் நிரந்தர முகவரிகளின்றி இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் தொடர்ந்தும் வசித்து வரும் அவலநிலைமை நாட்டில் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவர்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

அதற்கிணங்க, இடம்பெயர்ந்தோர் தொடர்பில் விசேட உறுப்புரைகளை உள்ளடக்கி சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதேவேளை குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Related Posts