இடது மார்பகத்திற்கு பதிலாக, வலது மார்பகத்தில் சத்திரசிகிச்சை

தனது மனைவியின் இடது மார்பகத்தில் இருந்த பருவை சத்திரசிகிச்சையின் மூலமாக அகற்றாமல், வலது மார்பைச் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியருக்கு எதிராக, அப்பெண்ணின் கணவன், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

களுத்துறை அகலவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரே, அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னுடைய தவறை உணர்ந்த அந்த வைத்தியர், மீண்டுமொரு சத்திரசிகிச்சையை மேற்கொண்டு, தனது மனைவியின் இடது மார்பகத்தில் இருந்த பருவை அகற்றியுள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடது மார்பகத்துக்குப் பதிலாக வலது மார்பகத்தைச் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாக வைத்தியரின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது ‘தனக்கு வேலைகள் அதிகம்’ என்று அந்த வைத்தியர், தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துள்ளார் என்றும் அதன் பின்னரே, தன்னுடைய மனைவியை மீண்டும் நினைவிழக்கச் செய்து, சத்திரசிகிக்சைக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியரை விசாரணைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்த களுத்துறை வைத்தியசாலைப் பணிப்பாளர், இரண்டு மார்பகங்களிலும் பருக்கள் இருந்தமையால் அவ்விரண்டையும் அகற்றி, அதிலிருந்தவற்றை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக அந்த வைத்தியர் அறிக்கையிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்

Related Posts