சங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான தமன், ‘சிந்தனை செய்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ‘மாஸ்கோவின் காவேரி’, ‘ஈரம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார்.
இவரின் இசையில் வெளிவந்த படங்கள் வெற்றி பெறவே தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு பலர் வாழ்த்துக்களை கூறினார்கள். இதில் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தையான தியாகராஜன் இருவரும் இணைந்து தமனுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளனர்.
தமன் தற்போது பிரசாந்த் நடித்து வரும் ‘சாஹசம்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் ஐந்து பாடல்கள் உருவாகி வருகின்றது.
பிரசாந்த் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நாசர், துளசி, லிமா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் 2015-ல் திரைக்கு வரவிருக்கிறது.