விடுதலைப்புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது.
இலங்கையில் 2009–ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்டப்போரில் ராணுவத்தால் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல செய்தியாளர் கல்லம் மெக்ரே ஆவணப்படமாக தயாரித்தார்.
அதில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் 27 வயது இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட காட்சியும் இடம் பெற்றிருந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு இசைப்பிரியாவின் படுகொலையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதை இலங்கை அரசும், ராணுவமும் தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்த நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையை ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்தவாரம் வெளியிட்டது.
அதில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் இரு தரப்பினருமே ஈடுபட்டு உள்ளனர் என்றும், இது தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு கோர்ட்டு அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்து படுகொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில் இசைப்பிரியா பற்றி கூறப்பட்டு இருப்பதாவது:–
சோபனா தர்மராஜா என்கிற இசைப்பிரியாவை 2009–ம் ஆண்டு மே மாதம் 18–ந்தேதி வட்டுக்காவல் பாலத்தின் வடக்கே நந்திக் கடல் பகுதியில் இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது. இதை பலரும் நேரில் பார்த்து இருக்கின்றனர். இது தொடர்பாக ஏராளமான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்திருப்பதை ஒரு வீடியோ காட்சி உறுதிப்படுத்துகிறது. அப்போது இலங்கை ராணுவத்தினர் அவர் போர்த்திக் கொள்ள மேலாடை ஒன்றை கொடுத்ததும் அதில் இடம் பெற்று உள்ளது. மேலாடை போர்த்திய நிலையில் இளம் பெண் அருகே இசைப்பிரியா உட்கார வைக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் இசைப்பிரியா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடக்கும் வீடியோ, புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதில் அவருடைய உடல் உறுப்புகள் வெளியே தெரியும் வகையில் உடைகள் திட்டமிட்டே விலக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றை தடயவியல் துறையினர் ஆராய்ந்தபோது இலங்கை ராணுவத்தால் இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.