2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
www.ugc.ac.lk மற்றும் www.admission.ugc.ac.lk ஆகிய இணையத்தள முகவரிகள் ஊடாக வெட்டுப் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்திற்கான புதிய மாணவர்களை ஒக்டோபர் மாதம் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவிக்கின்றார்.
ஏனைய பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள தலைமைத்துவ பயிற்சியின் முதல்கட்ட பயிற்சிக்காக 10,000 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான அழைப்பு கடிதங்கள் குறித்த மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது