இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்தியது இந்தியா!

மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்திய அணி.

India England Cricket

ராஜ்கோட் டெஸ்ட் டிராவில் முடிந்தது. விசாகபட்டினம் டெஸ்டில் இந்தியா வென்றது. மொகாலியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 283 ரன்களும், இந்தியா தனது முதல் இன்னிங்சில் 417 ரன்களும் எடுத்தன.

2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, நேற்று மதியம் உணவு இடைவேளையை தாண்டியதும், 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா வெற்றிபெற 103 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 78 ரன்கள் சேகரித்தார். ஹசீப் ஹமீது கடைசி வரை போராடி 59 ரன்களுடன் நாட்-அவுட்டாக நின்றார். இந்திய தரப்பில் அஸ்வின் 3, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. முரளி விஜய், வோக்ஸ் பந்தில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டாகி ஆரம்பத்தில் அதிர்ச்சியளித்தார்.

ஆனால், மறுமுனையில் களம் கண்ட பார்த்திவ் பட்டேல், சேவாக்கை போல பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு புஜாரா கம்பெனி கொடுக்க, அணி வெற்றி இலக்கை நெருங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு, புஜாரா 25 ரன்களில், அடில் ரஷித் பந்தில், ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து கேப்டன் கோஹ்லி களமிறங்கினார். அவரை வெகுநேரம் காக்க வைக்காத பார்த்திவ் பட்டேல் பவுண்டரி மூலம், வெற்றி இலக்கை எட்டச் செய்தார். 21வது ஓவரிலேயே இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை தட்டிப் பறித்தது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. பார்த்திவ் பட்டேல் 54 பந்துகளில் 67 ரன்களுடனும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), கோஹ்லி 6 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

4வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 8ம் தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி 16ம் தேதி சென்னையில் தொடங்கும்.

Related Posts