இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கான்பூரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடர் இன்று கான்பூரில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள முடிவு செய்தார்.

இந்திய அணியில் ரெய்னா, புதுமுக வீரராக பர்வேஸ் ரசூல் ஆகியோர் இடம்பிடித்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியில் டோனி 36 ரெய்னா 34 மற்றும் கோலி 29 ஓட்டங்களை பெற்றனர்.

பின்னர் 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ரோய், பில்லிங்ஸ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.2 ஓவரில் 42 ஓட்டங்களை குவித்தது. 2ஆவது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்களை; விளாசினார் பில்லிங்ஸ்.

4ஆவது ஓவரில் சாஹல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், மோர்கன் நெருக்கடி இல்லாமல் எளிதாக விளையாடினார்கள்.

இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்காக 83 ஓட்டங்களை பெற்ற போது மோர்கன் 38 பந்தில் 51 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

4ஆவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். 18.1 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜோ ரூட் 46 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2ஆவது இருபது20 கிரிக்கெட் போட்டி 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடைபெறவுள்ளது.

Related Posts