இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில், நேற்றய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்து இந்திய சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 455 ரன்களை குவித்தது.

CRICKET-IND-ENG

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்களை குவித்திருந்தது இந்தியா. கேப்டன் விராட் கோஹ்லி 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இரட்டை சதம் விளாசி, ஒரே வருடத்தில் 3 முறை இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி, மொயின் அலி பந்தில், ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து, 167 ரன்களில் அவுட்டானார்.

பின்னர் வந்த விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா 3 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும், மொயின் அலி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகினர். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 416 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின் அபாரமாக 48 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 26 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

இதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அரை சதம் கடந்த அஸ்வின் 58 ரன்களிலும், ஜெயந்த் யாதவ் 35 ரன்களிலும், உமேஷ் யாதவ் 13 ரன்களிலும் அவுட்டாகினர். 129.4 ஓவர்களில் இந்திய அணி 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முகமது ஷமி 7 ரன்களுடன் களத்தில் நின்றார். கடைசி கட்டத்தில் அஸ்வின் விளாசிய அரை சதம் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. முன்னதாக நேற்றைய ஆட்டத்தில் புஜாரா 119 ரன்கள் விளாசி, கோஹ்லிக்கு நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்திருந்தார். தற்போது, இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது.

ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேகரித்து தடுமாறி வருகிறது. கேப்டன் அலிஸ்டர் குக், முகமது ஷமி பந்தில் பௌல்ட் ஆகி 2 ரன்களில் நடையை கட்டி தடுமாற்றத்தை தொடங்கி வைத்தார். ஹசீப் ஹமீது 13 ரன்களில் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

நிலைத்து ஆட முற்பட்ட ஜோ ரூட், பொறுமை இழந்து, அஸ்வின் பந்தில் இறங்கி வந்து அடிக்க முற்பட லாங்-ஆப் திசையில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து 53 ரன்களுக்கு வெளியேறினார்.

பென் டக்கெட் 5 ரன்களில் அஸ்வின் பந்திலும், மொயீன் அலி 1 ரன்னில் ஜெயந்த் பந்திலும் அவுட்டாகினர். சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் பிட்ச் சாதகமாக மாறிவருவதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் இந்தியாவைவிட, 352 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Related Posts