ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மீண்டும் சாதனை வெற்றி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

david-miller

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 117 ரன்களும் கேப்டன் ஸ்மித் 108 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து, 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் அம்லா 45 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் டி காக் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் ரன் ரேட்டில் கவனம் செலுத்தி வந்தது. இறுதியில் மில்லர் அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அபாரமாக ஆடிய மில்லர் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உட்பட 118 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையையும் தென் ஆப்பிரிக்க அணி பெற்றுள்ளது. 2006 ஆம் ஆண்டில் சேஸிங்கில் 439 ரன்கள் சேர்த்து இந்த பட்டியலில் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்க அணியே உள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 362 ரன்களை வெற்றிகரமாக இந்தியா துரத்தியது.

Related Posts