ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக டோனி அப்பாட் கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவர் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்ற தவறி விட்டதாக மூத்த மந்திரி டர்ன்புல் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக ஆளும் தாராளவாத கட்சிக்குள் நடந்த ஓட்டெடுப்பில் டர்ன்புல் வெற்றி பெற்றார். டோனி அப்பாட் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் பதவி விலகினார்.
இதையடுத்து புதிய பிரதமராக டர்ன்புல் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஜெனரல் பீட்டர் காஸ்குரோவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டர்ன்புல், ஆஸ்திரேலியாவின் 29–வது பிரதமர் ஆவார்.
டர்ன்புல்லையும் சேர்த்து ஆஸ்திரேலியா கடந்த 8 ஆண்டுகளில் 5 பிரதமர்களை கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்ற பின்னர் டர்ன்புல் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘நான் எதிர்பார்த்திராத வகையில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து விட்டன. நான் தாராளவாத அரசாங்கத்தை வழிநடத்துவேன். பாராளுமன்றம் தன் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும். இடைத்தேர்தல் வராது’’ என கூறினார்.
60 வயதான டர்ன்புல், பெரும் பணக்காரர், முன்னாள் வங்கியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.