Ad Widget

ஆஸ்திரேலியாவின் உபகரணங்கள் மூலம் இலங்கையில் ஆள்கடத்தல்கள், சித்திரவதைகள்!

சி.ஐ.டி. என்ற இலங்கையின் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு ஆள்கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உதவிகளை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரே வழங்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போர் காரணமாக இலங்கையிலிருந்து அரசியல் தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழர்களைத் தடுத்துநிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் தந்திரோபயமாகவே இந்தக் கொடூரமான செயலில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி தொலைக்காட்சியான ஏ.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல் வலையமைப்பைப் தடுக்கும் வகையில் 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் இலங்கையின் சி.ஐ.டியினருக்கு உபகரணங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த 5 வருடங்களாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சி.ஐ.டி. உட்பட அனைத்துப் பிரிவுகளுக்கும் தேவையான தளபாடங்கள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான அதி நவீன தொழில்நுட்ப வசதிகளையும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

இதில் ஜேட் புலனாய்வு மென்பொருளும் அடங்குகின்றது. இந்த மென்பொருள் புகைப்படங்கள், காணொளிகள் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களைளை இலகுவாக ஒருங்கிணைக்கக் கூடியது.

மற்றையது சி.ஐ.டியினருக்கு வழங்கப்பட்ட ஐ.பி.எம். இன் ஐ2 ஆய்வு கைக்கணினி. இது பொலிஸார் இலக்கு வைக்கும் நபர்களின் அனைத்து நடமாட்டங்களையும் காணொளி வடிவில் கண்காணிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது.

அதேவேளை, கையடக்கத் தொலைபேசிகளின் அழைப்புக்களை ஒட்டுக்கேட்கக்கூடியதும், கையடக்கத் தொலைபேசிகளின் தரவுகளையும், மின் அஞ்சல்களையும், குறுந்தகவல்களையும் அழிக்கக்கூடிய இரண்டு அதி நவீன இயந்திரங்களையும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிசார் சிறிலங்கா பொலிசாருக்கு வழங்கியுள்ளனர்.

1994 ஆம் ஆண்டு இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் துணைத் தூதுவராகக் கடமையாற்றிய புறூஸ் ஹேய்க் இந்த விவகாரம் குறித்து ஏ.பி.சி. தொலைக்காட்சியின் செய்திகளுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு அதன் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கே ஆஸ்திரேலியாவால் வழங்கப்பட்ட இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த உபகரணங்கள் மற்றும் அதி நவீன புலனாய்வு வசதிகளைக் கொண்டு இலங்கைப் பொலிஸார் இலக்குவைத்த பலரை வீதிகளில் வைத்து கடத்திச்சென்று சி.ஐ.டி. தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை கடும் சித்திரவதைகளுக்குட்படுத்தி தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.அதேவேளை, இவர்களில் பலர் படுகொலைசெய்யப்பட்டனர் என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் இராஜதந்திரி ஹேய்க் குறிப்பிட்டுள்ளார்.

இதுமாத்திரமன்றி கொழும்பிலுள்ள இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தை புனரமைக்கவும் ஆஸ்திரேலிய அரசு உதவிகளை வழங்கியுள்ளதாகவும் ஏ.பி.சி தொலைக்காட்சியின் புலனாய்வுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சி.ஐ.டி. தலைமையகத்தில் வைத்தே பெரும்பாலானவர்கள் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டதாகச் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பான பீரிடம் போஃர் டோச்சர் நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பணிப்பாளரான சோனியா ஸ்கியட்ஸ் தெரிவித்துள்ளார்.

நான்காம்மாடி என அழைக்கப்பட்டுவரும் இந்த அலுவலகம் சித்திரவதைகளுக்குப் பெயர்போன இடமாக இன்றும் கருதப்படுகின்றது.

மிகவும் மோசமான சித்திரவதை முறைமைகளை சி.ஐ.டியினர் கையாள்வதாகக் கூறும் அவர், உடம்பின் அனைத்துப் பாகங்களையும் மோசமாகத் தாக்குதவது. இதில் ஆண், பெண் இரு தரப்பினரையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது, சிகரட்டால் சுடுவது மற்றும் சூடுகாட்டப்பட்ட கம்பிகளை பால் உறுப்புகளுக்குள் புகுத்தி கொடுமைப்படுத்துவது போன்ற மிகவும் கொடூரமான சித்திரவதை முறைமைகளை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கையாண்டுவந்ததாகவும், இவற்றை நிரூபிக்கப் போதுமான சான்றுகள் தம்மிடம் இருப்பதாகவும் சோனியா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு புதிய ரக வெள்ளைவான்களையும் அன்பளிப்புச் செய்துள்ளனர். இலங்கையில் வெள்ளைவான்களே ஆட்கடத்தல்கள் மற்றும் கடத்தப்பட்ட ஆட்களை சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்வதற்கும் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts