ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் தோல்வியடைந்தாலும்,அதன் மூலம் பல பாடங்களை கற்றுக் கொண்டதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.ஆனால் ஆஸ்கர் விருதுக்கான இறுதிச்சுற்று போட்டியில் விசாரணை படம் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் அதன் மூலம் கிடைத்த அனுபவம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
”ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொண்டது எங்கள் கண்களை திறந்துள்ளது.திறமையான பல திரைத்துறை நபர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெர்னர் ஹெர்சாக்,விசாரணை படத்தை பார்த்துவிட்டு பாராட்டியது மறக்க முடியாத ஒரு தருணம்.தனுஷும்,அவருடைய வுண்டர்பார் நிறுவனமும் இல்லை என்றால் இது எல்லாம் சாத்தியமே இல்லை.”என வெற்றிமாறன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் போட்டியில் மோதிய மற்ற திரைப்படங்களை தன்னால் பார்க்கமுடியவில்லை எனவும் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒன்பது படங்களும் சிறப்பானவை எனவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியாவின் சார்பில் ஒரு சர்வதேச மேடையில் பங்கேற்றது பெருமையாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.