ஆஸி. படகு: ’72 மணிநேர முன்னறிவிப்புடனேயே திருப்பி அனுப்பலாம்’

ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு 72 மணிநேரத்துக்கு முன்னர் எழுத்துமூலம் அறிவிப்பதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடன்பட்டுள்ளனர்.

lanka_failed_asylum_seeker

இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை வரும் வெள்ளியன்று நடக்கவுள்ளது.

153 இலங்கையருடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்த படகினை இடைநடுவில் கடலில் தடுத்து வைத்திருக்கின்ற தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இன்னொரு இலங்கைப் படகிலிருந்த, 41 பேரை (37 பேர் சிங்களவர்கள்) வெளியுலகுக்குத் தெரியாமலேயே இலங்கை கடற்படையிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்திருந்த நிலையிலே, தடுத்துவைக்கப்பட்டுள்ள 153 பேரையும் இலங்கைக்கு அனுப்பவிடாமல் தடுக்க நீதிமன்றத்தை நாடியதாக அகதிகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதன்படி, இந்த அகதிகளை இலங்கைக்கு அனுப்பவிடாமல் தற்காலிக தடை உத்தரவை நீதிமன்றம் அளித்திருந்தது.

மனித உரிமைகள் பேரவை விமர்சனம்

இலங்கையி்டம் ஒப்படைக்கப்பட்ட 41 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
இதனிடையே, தஞ்சம்கோரி வந்த 41 பேரையும் அவர்களின் விண்ணப்பத்தை முன்வைக்க போதுமான அவகாசம் கொடுக்காமல், நடுக்கடலில் வைத்தே விசாரித்து அனுப்பிய நடவடிக்கையை ஐநாவின் மனித உரிமைகள் பேரவை விமர்சித்துள்ளது.

மற்ற 153 இலங்கையரையும் திருப்பியனுப்ப விடாமல் மேல்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தடையையும் மனித உரிமைகள் பேரவை வரவேற்றுள்ளது.
இந்த விவகாரத்தை, ஐநாவின் அகதிகள் தொடர்பான உடன்படிக்கை உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக நீதித்துறை அனுகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஐநா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட 41 பேரும் நேற்று தென்னிலங்கையில் காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் சிலர், குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் இழைத்துள்ள குற்றங்களுக்காக வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
படகில் சாதாரண பயணிகளாகச் சென்ற ஏனையோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts