தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அகதிகள் அந்தஸ்து கோர முயற்சித்தால் அவர்களைட் திருப்பி அனுப்புவோம் என்று ஆஸ்திரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 ஈழத் அகதிகள் ஒரு வார ஜீவ மரண போராட்டத்துக்குப் பின் இந்தோனேசியாவில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் அதிகாரிகள் 44 பேரையும் சந்திக்க உள்ளனர். இந்தோனேசியா தடுப்பு முகாம்களில் 13,000 பேர் வேறுநாட்டில் குடியமர்த்துவதற்காக காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 44 ஈழத் தமிழர்களையும் இந்தோனேசியா அரசு ஏற்குமா? என்பது சந்தேகமே. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கே தாங்கள் செல்ல விரும்புகிறோம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லத்தான் கடல் பயணம் மேற்கொண்டோம் இதற்காக ஏஜெண்ட்டிடம் ரூ1 லட்சம் கொடுத்திருக்கிறோம் என்கின்றனர் ஈழத் தமிழ் அகதிகள்.
இந்திய குடியுரிமை வழங்கப்படாத காரணத்தாலேயே தாங்கள் தமிழகத்தை விட்டு வெளியேற நேர்ந்ததாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். இதனிடையே அண்மையில் சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்குள் நுழையும் படகுகளை திருப்பி அனுப்புவோம் என்று ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் எல்லை தொடர்பான அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தமிழ், ஆங்கில, சிங்களம் உட்பட 16 மொழிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையப் பக்கத்தில் எல்லைகள் தொடர்பான நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பாட்ரெல் பேசும் வீடியோ பதிவும் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழில் “எதிர்வரும் ஆஸ்திரேலிய அரசாங்கதேர்தல், படகுகளைத் திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலியாவின் உறுதியான, ஒரே மாதிரியான கரையோரப் பாதுகாப்பு கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
ஆஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும், ஆட்கடத்தலை முறியடிக்கவும் அத்துடன் மக்கள் தமது உயிர்களைக் கடலில் பணயம் வைப்பதையும் தடுக்கவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு ஆட் கடத்தும் படகும் திருப்பி அனுப்பப்படும்.
சட்டவிரோதமாகப் படகில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யும் எந்த ஒரு நபருக்கும் ஆஸ்திரேலியாவில் குடியேறுவது விருப்பத் தேர்வாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2014 ஜூலை 1-ந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னரோ இந்தோனேசியாவுக்குப் பயணித்து இந்தோனேசியாவில் ஐ.நா. அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்திருந்தால், ஆஸ்திரேலியாவில் மீள்குடியேற்றத்திற்காக ஆலோசிக்கப்பட மாட்டீர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தோனேசியாவில் தற்காலிகமாக தங்கியுள்ள 44 ஈழத் தமிழரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.