‘யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழுவின் பின்னணியில் இராணுவம் செயற்படுகின்றது என தாம் சந்தேகிப்பதாக’ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த 9பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே சிவாஜிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், ஆவா குழுவினருக்கு கைக்குண்டுகள் எவ்வாறு கிடைத்தன என பல கேள்விகள் எழுகின்றன’ என்று கூறினார்.
‘சாதாரண மக்கள் கைக்குண்டு வைத்திருப்பது என்பது சாத்தியப்பாடானது அல்ல. அந்த வகையில், இந்த பாதாளக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது என்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இந்தக் கைக்குண்டுகள் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
‘ஆவா’ குழு தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடவும் – பொலிஸார்