யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘ஆவா’ என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்துள்ள மேற்படி ‘ஆவா’ குழு, அவ்வீட்டிலிருந்தவர்களை வாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல்களையும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சம்பவ தினமே சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்வாறான கொலை, கொள்ளைச் சம்பவங்களை ‘ஆவா’ எனப்படும் ஒரு குழுவே மேற்கொண்டு வருவதாகவும் அக்குழுவுக்கு இணுவில் பகுதியினைச் சேர்ந்த குமரேசன் வினோதன் (21) (ஆவா வினோத்) என்ற இளைஞனே தலைமை தாங்குவதாகவும் தெரியவந்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
இந்த தகவலின் பிரகாரம், வட மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, சுன்னாகம், சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 25பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் இணைந்து மேற்படி ஆவா குழுவைத் தேடி நேற்று சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அக்குழுவின் தலைவர் உட்பட 9பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுத உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, யாழ். மாவட்டத்தில் பல கொள்ளை, கொலைகள், கப்பம் கோரல், வீடு புகுந்து ஆட்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி கூறினார்.
யாழ். மாவட்டத்தில் இவர்கள் பெருமளவான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த போதிலும் பொதுமக்கள் அச்சம் காரணமாக எந்தவொரு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை என்று கூறிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயக்கொடி, இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறையிடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இந்தக் குழுவில் இன்னும் 7 அல்லது 8பேர் கொண்ட சந்தேகநபர்கள் இருக்கலாம் என்றுத் அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.