Ad Widget

ஆவா குழு உறுப்பினர்கள் மேலும் நால்வருக்கு விளக்கமறியல்

ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்குபேரை எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார்.

ரவிந்திரன் நிதர்ஷன், லோகநாதன் தர்ஷிகன், மகாதேவன் கந்தகன் மற்றும் ரவிந்திரன் நிலூஷன் ஆகியோரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஆவா குழு தொடர்பில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை மூவரும், புதன்கிழமை மூவரும்,நேற்று முன்தினம் ஒருவரும், நேற்று நால்வருமாக கொழும்பு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தபட்டபோதே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் நால்வர் முன்னிலைப்படுத்தபட்டபோது பொலிஸார் சிறப்பு விசாரணை அறிக்கை ஒன்றையும் மன்றிற்கு சமர்ப்பித்திருந்தனர்.

இதேவேளை குறித்த நால்வரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக ஒரு வாள் கூரிய கத்தி ஆகியவற்றை மீட்டுள்ளதாக மன்றில் முன்னிலையான பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் அதிகாரி நீதவானுக்கு தெரிவித்திருந்தார்.

இதன்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நவாஸின் கையெழுத்துடன் மன்றிற்கு மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்புகளை பேணி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு உதவி ஒத்தாசை பரியும் முகமாக ஆவா எனும் பெயரில் ஆயுதக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவானது வடக்கில் கடமையில் ஈடுபட்டுள்ள உளவுத்துறையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் செயற்படுகின்றனர்.கூர்மையான ஆயுதங்களால் வெட்டி காயம் ஏற்படுத்தும் இந்தக்குழு அச்செயற்பாடு ஊடாக மக்களை அச்சுறுத்தி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளையும், முன்னெடுத்துள்ளது.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆவா குழுவில் முப்பது பேர் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள பொலிஸார் மகாதேவன் கந்தகன் எனும் சந்தேகநபர் ஆவா குழுவின் தற்போதைய தலைவராக கருதப்படும் தேவா எனும் நபரூடாகவே அக்குழுவில் இணைந்துள்ளார்.

இதேவுளை சந்தேகநபரான லோகநாதன் தர்ஷிகன் என்பவர் எதிர்வரும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடய்ஙகளை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல சிறை அதிகாரிகள் ஊடாக பரீட்சைக்கு குறித்த சந்தேகநபரை முன்னிலைப்படுத்த அனுமதித்ததுடன் சந்தேகநபர்கள் அனைவரையும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts