கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழு தலைவர் உள்ளிட்ட ஆறு பேரையும் 48 மணித்தியாலங்கள் காவலில் வைத்து, யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்பட்ட, ஆவா குழு தலைவர் சத்தியவேல் நாதன் நிஷாந்தன் உள்ளிட்ட மூவர் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று காலை புறக்கோட்டை பஸ்தரிப்பிடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
மேலும், நேற்று முன்தினம் இரவு மட்டக்குளி பகுதியில் வைத்து இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் வைத்து மேலும் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன், சந்தேகநபர்கள் வசம் இருந்து கத்திகள் இரண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.