புலிகளை அழித்த எமக்கு ஆவா ஒன்றும் பெரிய விடயம் அல்ல என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எல்லோருக்கும் தெரியும் ஆவா என்பது கடத்தல் வேலை செய்யும் ஒரு குழு. இது போன்ற குழுவினர் யுத்தம் நடைபெற்ற போதும் இருந்தார்கள்.
இது போன்ற இன்னும் பல பாதாள உலக குழுக்களும் அப்போது இருந்தன. 30 வருடங்களாக இருந்த யுத்தத்தை முடிவு செய்த எமது முப்படைகளுக்கும் பொலிஸாருக்கும் இது பெரிய விடயம் அல்ல. அதை பார்ப்பதற்கு ஜனாதிபதிக்கோ நாட்டுக்கோ எந்த தேவையும் இல்லை.
வடக்கில் பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. வடக்கில் நடந்தவற்றை ஒரு இனவாதமாக எடுத்துக்கொண்டு அதை பற்றி பேச வேண்டிய தேவையும் இல்லை.
நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் பொலிஸாரின் தாக்குதலில் யாராவது ஒரு நபர் உயிரிழந்தால் அங்கு அசாதாரண நிலை உருவாகும். இது போன்ற சம்பவங்கள் வடக்கில் மட்டும் அல்ல நாட்டில் தெற்கு பகுதிகளிலும் இடம்பெறுகின்றது.
குறிப்பாக கல் கொண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. வீதியை மறித்து போராட்டங்கள் மேற்கொள்கின்றனர்.
இது நாட்டில் இடம்பெறும் சாதாரண விடயம், குறித்த யாழ்ப்பாண சம்பவம் பொலிஸார் மீது சில பிழைகள் இருக்கின்றன என நாங்கள் கேள்விப்பட்டோம்.
எனவே குறித்த யாழ்ப்பாண சம்பவத்தை தயவு செய்து இனவாதமோ அல்லது அரசியல் இலாபமோ தேட முற்பட வேண்டாம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.