ஆவாக் குழுவெனக் கூறி தமிழ் இளைஞர்கள்மீது பயங்கரவாதத் தடைச்சட்டம், ஒருவரை பிணையில் விடுவித்தது நீதிமன்றம்!

ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் யாழ்ப்பாணக் காவல்துறையினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்களைக் கைதுசெய்தனர்.

ஆவாக் குழுவுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்த நான்குபேரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், குறித்த நபரால் முகநூலில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படும் மோட்டார் சைக்கிள் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உந்துருளி திருத்தகம் ஒன்றை நடத்தி வரும் நபர் என்றும், அவருடைய வேலைத்தளத்தில் வேலை செய்யும் இன்னொருவரிடமிருந்தே குறித்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பாக முன்னிலையான சட்டத்தரணி செலஸ்ரின், ஆவாக் குழு காவல்துறையினராலேயே அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அது தற்போது தமிழ் இளைஞர்கள்மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரயோகிக்கும் அளவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், சாதாரண குற்றச் செயல்களுக்குக்கூட காவல்துறையினர் ஆவா என்ற பெயரைக் கூறி விடயத்தை பெரிதுபடுத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.

இதனையடுத்து, சந்தேக நபர்களிடம் விசாரணைகளை நடாத்திய நீதவான் சதீஸ்தரன் உந்துருளி திருத்தகத்தை நடாத்தும் இளைஞரை 75ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ஏனைய மூவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதற்கிடையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பில் இன்று மேலும் 11 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆவா குழு என்ற சந்தேகத்தின்பேரில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளை மீள் உருவாகியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்த 11 இளைஞர்களது வழக்கு சாதாரணசட்டத்திற்கு மாற்றப்பட்டு பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

 

Related Posts