யாழ்.பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த இருந்த நிலையில், மன்றுக்கு பதில் நீதிவான் சமூகமளித்திருந்திருந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் இருவர் மீது ஆவாக்குழுவினைச் சேர்ந்த நபர்கள் சாரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
சம்பவத்தை அடுத்து, பொலிஸ் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினர், விசேட அதிரடிப்படையினரின் தீவிர தேடுதலின் பின்னர், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவாக்குழுவினைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், பயன்படுத்திய வாள்கள், மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட வாள்கள் மற்றும், மோட்டார் சைக்கிள்களுடன் 7 சந்தேக நபர்களும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே, நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துமாறும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ்.நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.